Health

நலந்தானா..!!

நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளும் முதல் வார்த்தை, முக்கியமான வார்த்தை, `நலந்தானா?’ என்பது! மனித வாழ்க்கையில் `நலம்’ அவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

ஆனால் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் உடல் நலக் குறைபாட்டுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு விவாத பொருளாக மாற்றாமல், `நலமாக இருக்கிறேன்’ என்று கூறி விடுவார்கள்.

சிலரோ, `நலந்தானா?’ என்று கேட்டு முடிப்பதற்குள், தனக்கு அங்கே வலிக்கிறது.. இங்கே வலிக்கிறது என்று புலம்பத் தொடங்கி விடுவார்கள். இந்த புலம்பல்கள் தனக்கு இருக்கும் வலியை மற்றவர்களுக்கும் ஓரளவு பரவச் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவருக்கு இருக்கும் வலியும் அதிகரிக்கத் தான் செய்யுமே தவிர குறையாது.

இதுபற்றி மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

“ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும் போது ஓரளவுக்கு அவரது மனநலமும் பாதிக்கும். மனநலம் அதிகம் பாதித்தால் உடல் ஆரோக்கியம் மேலும் பாதிக்கும். ஒருவருடைய மனநலன் பாதிக்கப்படுவதற்கு குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினை, சமூக சூழல் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தனக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அடுத்தவர்களிடம் புலம்பாமல் அதை எப்படி தீர்ப்பது என்று தீர்க்கும் வழியைப் பற்றி தான் ஆலோசிக்கவேண்டும். உடல் நலம் கெடும்போது சிலருக்கு பயம் வந்து விடும். அந்த பயமே, புலம்பலாக வெளிப்படுகிறது.

அதனால் ஒருவர் தன்னிடம் புலம்பும் போது அவர் தன் ஆரோக்கியம் பற்றி நிறைய பயப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதனால் மருத்துவ விஞ்ஞானத்தை நம்பி, புலம்பலை கைவிடுவது தான் சிறந்த வழி.

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நோய் வந்து விட்டால் குடும்பமே அவரை சுற்றி நின்று வேதனையை வெளிபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேதனை அவர்களை மேலும் சோர்வடையச் செய்யும்.

அதற்கு பதிலாக, இந்த மாதிரியான நோய்களில் இருந்து மீண்டவர்கள் பற்றிய தகவலைக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டவேண்டும்.

Comments