மனம்


உற்சாகத்தில் ஓர் உண்மையான மாயவித்தை உள்ளது.

 - நார்மன் வின்சென்ட் பீலே

மனம் என்ற தமிழ் சொல் ஆங்கிலத்தில் மைன்ட் (mind) என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாகவே மனம், ஏதோ இதய செயல்பாட்டின் ஓர் அங்கம் போலவும், காதல், மன அழுத்தம், மனிதாபிமானம் போன்ற உணர்ச்சிகளும் இதயத்தில்தான் ஏற்படுகின்றன என்பது போலவும் ஒரு தவறான புரிதல்தான் பரவலாக மனிதர்களிடையே இருக்கிறது. இது போன்ற தவறான புரிதல் மூலம் மனம் என்ற வார்த்தை இதயத்தின் உணர்வுகள் என்று நினைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மனம் என்பது உடலில் இருந்து வேறுபட்டதல்ல. உடல் வேறு; மனம் வேறு என்று வரும் ஒரு சில விளக்கங்கள் ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் காலங்காலமாக உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்று மனம் வேறு, உடல் வேறு கிடையாது. இரண்டுமே ஒன்று தான் என்ற நிலைக்கு உளவியலும் இன்றைய நவீன மூளை நரம்புமண்டல அறிவியல் துறையும் ( neuroscience), நவீன தத்துவவியலும், பரிணாமவியலும் அழைத்துச் சென்று விட்டது. நம் ஒவ்வொருவரது மூளையிலிருந்தும் மனதைப் பிரிக்க முடியாது என்பதே இன்றைய நிலை. பொதுவாக மனம் என்பது நம் அனுபவங்கள் மூலமும், சமூக தாக்குதல் மூலமும், நம் பரிணாம வளர்ச்சி மற்றும் பயணத்தின் மூலமாகவே வடிவமைக்கப்படுகிறது.

ஒரு மனிதருக்கு நாய்கள் என்றால் பிடிக்கிறது. மற்றொருவருக்கு நாய்கள் என்றாலே பிடிப்பதில்லை. ஒருவருக்கு பாம்பைக் கண்டவுடன் படபடத்து உயிர்போகிறது. இதற்கெல்லாம் காரணம் அவரவரது அனுபவங்கள், சமூக கற்பித்தல்கள் மற்றும் நமது பரிணாமமுமே (அதாவது நம் பரிணாம பாதையில் ஆபத்தான விலங்குகளை கண்டால் எப்படி எல்லாம் நம் முன்னோர்கள் அஞ்சினார்களோ அதே இயல்புகள் நம்மிடமும் தொடர்வது) ஆகும்.

மூளை இல்லை என்றால் மனம் இல்லை. பொதுவாக மூளை என்பது நம் வெளிச் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதாகவும் , மனம் என்றால் உள் செயல்களைக் குறிக்கும் சொல் என்றும் சொல்கிறார்கள். மனசு / மனம் என்பதை பொதுவாக நெஞ்சில் கை வைத்துச் சொல்கிறோம். அறிவு என்பதை மூளையின் பகுதியாகக் காண்கிறோம். அறிவியல்ரீதியாக ஒரு நிகழ்வைப் பற்றி நாம் பேசும்போது, அதிலுள்ள ஆய்வுப்பூர்வமான அலசல்களை அறிவு/மூளை செய்கிறது. அது சார்பான உணர்ச்சிபூர்வ அனுபவத்தை மனம்தான் அலசுகிறதே தவிர மூளை அல்ல. ஆக, மனம் மூளையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அது உணர்ச்சிபூர்வமான அலசல்களைச் செய்வதால் நெஞ்சோடு வைக்கிறோம்.

நமது எண்ணங்கள், சிந்தனைகள், உள்வாங்கப்பட்ட கருத்துகள் அல்லது நம்முள் திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எல்லாமுமாகச் சேர்ந்து நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான மனம் என்னும் மகா ஆற்றலை, பேராற்றலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த மனம் என்னும் மகா ஆற்றல் கொண்டு ஒரு மனிதன் வாழ்வது, வீழ்வது, வெற்றிபெறுவது, தோல்வி பெறுவது எல்லாமே அவனவன் மனம் என்னும் பையில் எதுமாதிரியான சிந்தனைகளை, கருத்துகளை கொண்டு நிறைத்துக் கொள்கிறான் என்பதைப் பொறுத்ததே.

மனம் பற்றிய புரிதலுக்கு பொதுவாக சொல்லப்படும் கதை ஒன்று. ஓர் அரசனுக்கு திடீரென்று இரண்டு கண்களும் குருடாகிவிடுகின்றன. மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையைக் கொண்டு வந்து பிழிந்தால் தான் அதைக் குணப்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டது. அந்த சஞ்சீவி மலைக்குச் செல்ல மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும் என்றும் நம்பப்பட்டது.

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் "நான் கொண்டுவருகிறேன்' என கிளம்புகிறான். அவனுக்கு வழிகாட்ட தேவதை ஒரு நிபந்தனை விதித்ததாம்."நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்க வேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிப் பார்க்கவே கூடாது' என்பதே அந்த நிபந்தனை.
முதலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச் சென்றது. திடீரென்று பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. "என்னாயிற்று?' என்று தன்னையறியாமல் முதலாமவன் திரும்பிப் பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டதால் அவன் கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். தேவதையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட பாதிதூரம் வந்துவிடுகிறான் அவன். திடீரென்று சிரிப்பொலி கேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பிப் பார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான்.

அடுத்து மூன்றாவது குமாரரின் முறை. அவனும் வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை பின் செல்கிறது. இவனோ பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். அவனுக்குப் பின்னால் கேட்கும் அலறல் சத்தம், சிரிப்பொலி இவற்றுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே... முன்னேறிச்சென்று வெற்றியும் பெற்று மூலிகையையும் கைப்பற்றுகிறான்.

இங்கே... இந்தக் கதையிலே பின்னால் வரும் தேவதைதான் நம் மனது. அது நம் ஒவ்வொருவருக்கும் நிபந்தனையை விதித்துவிட்டு, செயல் உறுதியைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் செய்யும். அதைப் புறக்கணிப்பதில், கண்டுகொள்ளாமல் பயணிப்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.

எண்ணங்களே மனம். எண்ணங்களே இல்லாமலிருப்பது தான் மனதை லேசாக்கும். மனதின் பாரத்தைக் குறைக்கும்; மனதில் தெளிவைக் கொடுக்கும். எண்ணாமல் இருப்பதற்குப் பழக்கம் வேண்டுமென்பதால், பழக்கம் வரும்வரை, நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும், நம்முள் புகுத்திக்கொள்வதுமே வாழ்வில் வெற்றியை ருசிக்க விரும்பும் நம் எல்லாருக்குமே நல்லது.
       - தினமணி

Comments